பாடம் 19. நடுவண் அரசு

பாடம் 19. நடுவண் அரசு
கலைச்சொற்கள்
| முடிவுக்கு கொண்டு வருதல் | Terminate | bring to an untimely end. |
| எதிர்பாரா செலவு நிதி | Contingency fund | an amount of money that can be used to pay for problems that might happen. |
| பொதுமன்னிப்பு | Pardon | absolving the convict of all guilt and punishment. |
| தண்டனை குறைப்பு | Remission | quantitative reduction of punishment without affecting Nature of punishment. |
| முன்னுரிமை | Precedence | priority of importance. |
| பதவியின் நிமித்தமாக | Ex-officio | because of an office. |
சரியான விடையைத் தேர்வு செய்க
1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் _________ ஆவார்.
- குடியரசுத் தலைவர்
- தலைமை நீதிபதி
- பிரதம அமைச்சர்
- அமைச்சர்கள் குழு
விடை: குடியரசுத் தலைவர்
2. ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
- குடியரசுத் தலைவர்
- இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
- நாடாளுமன்ற விவகார அமைச்சர்
- லோக்சபாவின் சபாநாயகர்
விடை: லோக்சபாவின் சபாநாயகர்
3. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்
- குடியரசுத் தலைவர்
- மக்களவை
- பிரதம அமைச்சர்
- மாநிலங்களவை
விடை: மக்களவை
4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ____________
- 18 வயது
- 21 வயது
- 25 வயது
- 30 வயது
விடை: 25 வயது
5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு
- குடியரசுத் தலைவர்
- பிரதம அமைச்சர்
- மாநில அரசாங்கம்
- நாடாளுமன்றம்
விடை: நாடாளுமன்றம்
6. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
- சட்டப்பிரிவு 352
- சட்டப்பிரிவு 360
- சட்டப்பிரிவு 356
- சட்டப்பிரிவு 365
விடை: சட்டப்பிரிவு 360
7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.
- குடியரசுத் தலைவர்
- இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
- ஆளுநர்
- பிரதம அமைச்சர்
விடை: குடியரசுத் தலைவர்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. _________ குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது
விடை: நிதி மசோதா
2. ________ நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியக் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
விடை: பிரதம அமைச்சர்
3. __________ அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.
விடை: துணை குடியரசுத் தலைவர்
4. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் _________
விடை: அட்டார்னி ஜெனரல்
5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ___________
விடை: 65
6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் _________ ஆகும்
விடை: உச்ச நீதிமன்றம்
7. தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை _________
விடை: 29 (2021 ஏப்ரல் வரை)
சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
1. i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்
iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- ii & iv சரியானவை
- iii & iv சரியானவை
- i & iv சரியானவை
- i, ii & iii சரியானவை
விடை: i, ii & iii சரியானவை
2. i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
ii) மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்
iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது
iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
- ii & iv சரியானவை
- iii & iv சரியானவை
- i & iv சரியானவை
- i & ii சரியானவை
விடை: ii & iv சரியானவை
பொருத்துக.
| 1. சட்டப்பிரிவு 53 | மாநில நெருக்கடிநிலை |
| 2. சட்டப்பிரிவு 63 | உள்நாட்டு நெருக்கடிநிலை |
| 3. சட்டப்பிரிவு 356 | குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் |
| 4. சட்டப்பிரிவு 76 | துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம் |
| 5. சட்டப்பிரிவு 352 | இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம் |
| விடை: 1-இ, 2-ஈ, 3-அ , 4-உ, 5-ஆ | |
கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி
1. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
- குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- வாக்காளர் குழுமம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
2. நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படிஎவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
- இராசாங்க அமைச்சர்கள்
- இணை அமைச்சர்கள்
3. நிதி மசோதா குறிப்பு வரைக.
- அரசின் வருமானம் மற்றும் செலவு சம்மந்தமான அல்லது பண சம்மந்தமான நிதி மசோதா ஆகும்.
- புதியவரி விதிப்படி, வரி நீக்கம் மற்றும் அரசாங்க கடன் சம்மந்தப்பட்ட மசோதாக்கள் நிதி மசோதா ஆகும்.
- நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ, அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை.
- மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும்.
- இம்மசோதா மாநிலங்களவை ஒப்புதலுடன் சட்டமாக மாறும்
- மாநிலங்களவை 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில் ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும்.
4. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.
- இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
- இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு.
- நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்ளுவதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
- நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார்.
- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து
சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.
5. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
- இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
- ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
- அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
- குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
விரிவான விடையளி
1. இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி.
சட்டமன்ற அதிகாரங்கள்
- பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
- மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
- குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
- அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம்.
- குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
- நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம். மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
- கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்.
- மேலும் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
நீதி அதிகாரங்கள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
2. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.
(அ) தனக்கேயுரிய நீதி வரையறை
உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்கு உட்பட்டவை ஆகும். அவைகள்
- இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்
- அடிப்படை உரிமைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும். அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம்வழங்குகிறது.
(ஆ) மேல்முறையீட்டு நீதி வரையறை
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் (Civil and Criminal) அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது.
அப்படிப்பட்ட வழக்குகளைத் தீர்க்க அரசியலமைப்புச் சட்டப்படி மேலும் சட்டவிளக்கம் தேவையென உயர் நீதிமன்றம் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவ்வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்ல முடியும்.
(இ) ஆலோசனை நீதிவரையறை
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.
(ஈ) இதர நீதி வரையறை
உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
(உ) நீதிப்புனராய்வு
ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் உள்ளது இது நீதிப்புனராய்வு (நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம்) எனப்படும். பின்வரும் தனிப்பட்ட நீதிமன்ற மறுஆய்வு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது. அவை
- நடுவண் அரசு, மற்றும், மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள்.
- அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளை விளக்கி தெளிவுபடுத்துதல்.
- அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.
- மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் போன்றவைகளை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது
3. இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
- பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
- தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் (Agenda) குறித்து முடிவு செய்வார்.
- காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
- பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
- நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
- பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
- பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
- சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.
4. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க
- இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல் வரவு – செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுதல் பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளரச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.
- நாடாளுமன்றம் குடியரசுத்தலைவர் மீதான அரசியில் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியக் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது.
- நாடாளுமன்றமானது நிர்வாகத்தனைக் கேள்விகள், துணைக்கேள்விகள் கேட்பதன் மூலமாகவும் ஒத்தி வைப்பு தீர்மானங்கள், விவாதஙக்ள், தீர்மானங்கள் இயற்றுதல், கண்டனத் தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதித்து அவையில் கொண்டு வருதல் போன்றவைகளின் மூலமாகவும் தங்களது கட்டுப்பாட்டினை செலுத்தி வருகின்றது.
- மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு.
சில பயனுள்ள பக்கங்கள்