Tamil Nadu 12th Standard Tamil Book Solution | Lesson 3.6 – திருக்குறள்

பாடம் 3.6. திருக்குறள்

12ஆம் வகுப்பு தமிழ், திருக்குறள் பாட விடைகள் - 2023

கவிதைப்பேழை > 3.6. திருக்குறள்

கற்பவை கற்றபின்…

1. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.

அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

விடை :

இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

2. கடலின் பெரியது

 1. உற்ற காலத்தில் செய்த உதவி
 2. பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
 3. தினையளவு செய்த உதவி

விடை : பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்

அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்

விடை :

ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

4. கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளை எழுதுக.

உயர் அலுவலரின் வருகை

அலுவலகமே அல்லாடும்

அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே

கோப்புகளை விரைந்து முடிக்க

ஒழுங்கு செய்ய

நேரத்தில் இருக்க வேண்டும்

விரைகிறது மனம்

பரபரப்பும் மனவழுத்தமுமாய்

வண்டியை எடுக்கிறேன்

காலைக் கட்டிக் கொள்கிறது குழந்தை

‘போ அந்தப் பக்கம்’

உதறிச் செல்கிறேன் குழந்தையை.

விடை :

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

5. இலக்கணக்குறிப்புத் தருக.

 • அன்பும் அறமும் – எண்ணும்மை
 • நன்கலம் – பண்புத்தொகை
 • மறத்தல் – தொழிற்பெயர்
 • உலகு – இடவாகுபெயர்

6. பொருள் கூறுக.

 • வெகுளி – கோபம்
 • புணை – தெப்பம்
 • ஏமம் – பாதுகாப்பு
 • திரு – செல்வம்

7. வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?

 1. செய்யாமல் செய்த உதவி
 2. பயன் தூக்கார் செய்த உதவி
 3. தினைத்துணை நன்றி
 4. காலத்தினால் செய்த நன்றி

விடை : செய்யாமல் செய்த உதவி

8. பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.

முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.

9. செல்லிடத்து – புணர்ச்சி விதி கூறுக.

செல்லிடத்து = செல் + இடத்து

 • தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “செல் + ல் + இடத்து” என்றாயிற்று
 • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “செல்லிடத்து” என்றாயிற்று

10. பொருத்துக.

அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்1) சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி2) ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம்3) தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினாற் செய்த நன்றி4) நன்மை கடலின் பெரிது
 1. 4, 3, 2, 1
 2. 3, 4, 1, 2
 3. 1, 2, 3, 4
 4. 2, 3, 4, 1

விடை : 3, 4, 1, 2

குறுவினா

1. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?

அறத்தின் வழியாக இல்லற வாழ்க்கை வாழ்பவர் முயல்வருள் எல்லாம் தலையானவர்

2. ஞாலத்தின் பெரியது எது?

உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவை விட மிகப் பெரியதாகும்.

3. மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று ; அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.

 • மறக்க கூடாதது – நல்லது
 • மறக்க கூடியது – தீமை

4. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?

ஒருவருடைய செல்வம் குறையாமலிருக்க வழி எது என்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

5. சினத்தை ஏன் காக்க வேண்டும்?

ஒருவர் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்கா விட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.

சிறுவினா

1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

இக்குறட்பாவில் பயின்று நிரல்நிரை அணியாகும்.

அணி இலக்கணம்

ஒரு செய்யுளின் முதலில் சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளும் முறையாகும். அதாவது சில சொற்களை ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல் நிறை அணியாகும்.

பொருள்

இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும், பயனையும் முழுமையாகத் தரும்.

அணிப்பொருத்தம்

இக்குறட்பாவில் அன்பு, அறன் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனேவ இத்திருக்குறள் நிரல் நிறை அணிக்குப் பொருத்தமாயிற்று.

அன்பு – பண்பு; அறன் – பயன் என்று நிரல்பட உள்ளது.

2. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

 • ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியும், அறச்செயல்கள் செய்தும் வாழும் இல்லற வாழ்வைப் பெறுவான் என்றால், அவன் இல்வாழ்க்கை அன்பினால் உருவான நல்ல பண்பையும், அறச் செயலினால் உருவாகின்ற நல்ல புகழாகிய பயனையும் அடைவான்.
 • அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விடமேம்பட்டவர் ஆவார்.
 • உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர், வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவார்.

3. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? – குறள் வழி விளக்குக.

 • இந்நில உலகம், வானகம், கடல், பனை இவைகளை விடவும் நன்றி உயர்ந்தது.
 • தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
 • உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவை விட மிகப் பெரியதாகும்.
 • இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலை விடப் பெரிதாகும்.
 • ஒருவர் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் ப யன் தெரிந்தவர்கள், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

4. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.

 • நமக்கு தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும்.
 • முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.
 • ஒருவர் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்கா விட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.
 • சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

5. கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

அணி இலக்கணம்

கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி அதற்கேற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

பொருள்

சினம் தன்னைக் கொண்டவனை, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

அணிப்பொருத்தம்

இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது

நெடுவினா

1. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.

விண் மண் : 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் த னக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தா லும் ஈடாகாது.

உலகம் :

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவை விட மிகப் பெரியதாகும்.

கடல் :

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக் குச் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலை விடப் பெரிதாகும்.

பனை

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவர் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் ப யன் தெரிந்தவர்கள், அதனையே பனை யளவாகக் கொண்டு போற்றுவர்.

வாழ வழி

நன்றி மறப்பது நன்ற ன்று; நன்ற ல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று ; அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வாய்ப்பிருக்கும்; ஒருவர் செய்த உதவியை மறந்துவிட்டவர்க்கு உய்வே இல்லை.

2. சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் – இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.

சினமானது அருள் உள்ளத்தை அழித்து மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். சினத்தை காத்தால் வாழ்வு மேன்மை அடையும் சினத்தைக் காப்பான்

சினம் செல்லுமிடம்

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பா ன் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

தன் சினம் செல்லுபடியாகும் மெலியவரிடத்தில் கொள்ளாமல் காப்பவரே உண்மையில் சினம் காப்பவர்;

மறத்தல் நன்று

மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனான் வரும்.

தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை ம றந்துவிட வே ண்டும்.

எனும் பகை

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?

முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.

தன்னைக் காக்க சினம் தவிர்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

ஒருவர் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்கா விட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.

சுற்றம் பேன சினத்தை தவிர்

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெ ருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். எனவே சினத்தைக் காத்தோமென்றால், எளியவரோடு பகை மேற்கொள்ளமாட்டோம்; யாரிடத்தும் சினம் கொள்ளமாட்டோம்; முகமலர்ச்சியும், அகமகிழ்ச்சியும் அதிகமாகும்; தன்னையே காத்துக் கொள்வோம்; சுற்றத்தையும் காப்பாற்றுவோம். இதனால் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால் கூறுகின்றது.

திருக்குறள் – கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

 • பண்பும் பயனும், வையகமும் வானகமும், நகையும் உவகையும் – எண்ணும்மைகள்
 • பிறத்தல், வெஃகுதல் – தொழிற்பெயர்
 • உலகு – ஆகுபெயர்

சொல்லும் பொருளும்

 • வையம் – மண்ணுலகம்
 • வானகம் – விண்ணுலகம்
 • ஞாலம் – உலகம்
 • துணை – அளவு
 • வெஃகி – விரும்பி
 • அஃகாமை – குறையாமை
 • நகை – முகமலர்ச்சி
 • உவகை – மனமகிழ்ச்சி
 • கொள்ளி – நெருப்பு
 • தெள்ளியர் – தெளிந்த அறிவுடையார்

புணர்ச்சி விதி

1. நன்றன்று = நன்று + அன்று

 • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடு” என்ற விதிப்படி “நன்ற் + அன்று” என்றாயிற்று
 • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “நன்றன்று” என்றாயிற்று

2. நன்றல்லது = நன்று + அல்லது

 • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடு” என்ற விதிப்படி “நன்ற் + அல்லது” என்றாயிற்று
 • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “நன்றல்லது” என்றாயிற்று.

3. உய்வுண்டாம் = உய்வு + உண்டாம்

 • உயிர்வரின்….. முற்றும் அற்று” என்ற விதிப்படி “உய்வ் + உண்டாம்” என்றாயிற்று
 • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “உய்வுண்டாம்” என்றாயிற்று.

4. உய்வில்லை = உய்வு + இல்லை

 • உயிர்வரின்….. முற்றும் அற்று” என்ற விதிப்படி “உய்வ் + இல்லை” என்றாயிற்று
 • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “உய்வில்லை” என்றாயிற்று.

5. யாதெனின் = யாது + எனின்

 • உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” என்ற விதிப்படி “யாத் + எனின்” என்றாயிற்று
 • உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே” என்ற விதிப்படி “யாதெனின்” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. திருக்குறள் என்பது ……………

 1. ஆகுபெயர்
 2. கருவியாகுபெயர்
 3. அடையெடுத்த ஆகுபெயர்
 4. அடையெடுத்த கருவியாகுபெயர்

விடை : அடையெடுத்த கருவியாகுபெயர்

2. திருக்குறளை இலத்தின் மொழியில் மொழிபெயர்த்தவர் ………………

 1. வீரமாமுனிவர்
 2. ஜி.யு.போப்
 3. கால்டுவெல்
 4. சார்லஸ் வில்கினிஸ்

விடை : வீரமாமுனிவர்

3. ஏட்டுசுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு ………..

 1. 1912
 2. 1812
 3. 1712
 4. 1612

விடை : 1812

4. அறத்துப்பால் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை

 1. 700
 2. 250
 3. 380
 4. 133

விடை : 380

5. இனத்துப்பாலில் உள்ள இயல்கள்

 1. 2
 2. 3
 3. 4
 4. 9

விடை : 2

6. திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள்

 1. 6
 2. 7
 3. 8
 4. 9

விடை : 9

7. அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் அமைந்துள்ள பிரிவு

 1. இன்பதுப்பால்
 2. காமத்துப்பால்
 3. பொருள்பால்
 4. அறத்துப்பால்

விடை : பொருள்பால்

8. இல்லறவியல் அமைந்துள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை

 1. 130
 2. 200
 3. 133
 4. 250

விடை : 200

8. இல்லறவியலில் அமைந்துள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை

 1. 130
 2. 200
 3. 133
 4. 250

விடை : 200

9. கற்பியல், களவியல் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

 1. 18, 7
 2. 7, 18
 3. 9, 16
 4. 16, 9

விடை : 7, 18

10. ஊழியலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

 1. 4
 2. 2
 3. 3
 4. 1

விடை : 1

11. திருக்குறள் ……………. ஆன நூல்

 1. குறள் வெண்பாக்களால்
 2. சிந்தியில் வெண்பாக்களால்
 3. ஆசிரியப்பாவால்
 4. கலிப்பாவால்

விடை : குறள் வெண்பாக்களால்

12. திருக்குறள் என்பது

 1. ஓரடி வெண்பா
 2. மூவடி வெண்பா
 3. இரண்டடி வெண்பா
 4.  நான்கடி வெண்பா

விடை : இரண்டடி வெண்பா

13. உலகப்பொதுமறை, அறவிலக்கியம், தமிழர் திருமறை உள்ளிட்ட சிறப்புப் பெயர்களுக்குரிய நூல்

 1. நாலடியார்
 2. திருக்குறள்
 3. நான்மணிக்கடிகை
 4. இன்னா நாற்பது

விடை : திருக்குறள்

குறுவினா

1. தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு எதை கொடுத்தால் ஈடாகாது?

தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.

2. யார் ஒருவர் பிறர் செய்த உதவியை பனையளவாக கொண்டு போற்றுவர்?

ஒருவர் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் ப யன் தெரிந்தவர்கள், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

3. எது மேலாங்கி தோன்றும் என வள்ளுவர் கூறுகிறார்?

ஒருவர் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவருக்கு இயல்பாக உள்ளதாகும் அறிவே மேலோங்கித் தோன்றும் என வள்ளுவர் கூறுகிறார்.

4. உலக இயல்பு எத்தனை வகைப்படும்?

உலக இயல்பு இரு வேறு வகைப்படும்;

 • செல்வம் உடையவர் அறிவுடையவராக இருப்பதில்லை;
 • தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.

5. பழம்பாடல் பாடித் திருக்குறளுக்கு உரை செய்தவர்களை கூறுக

தருமர், மணக்குடவர், தாமத்தார், நச்சர், பரிதி, பரிமேலகர், திருமலையார், மல்லர், பரிபெருமாள், காளிங்கர்

6. திருக்குளின் பெருமயை விளக்கும் பழமொழிகள் யாவை?

 • ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
 • பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்

6. திருவள்ளூவரை புகழும் விதமாகத் தமிழக அரசு செய்துள்ளவை யாவை?

 • கன்னியாகுமாரியில் கி.பி.2000-ல் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ளது.
 • வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளது.

5. திருக்குறள் – குறிப்பு வரைக

 • திரு + குறள் = திருக்குறள்.  (சிறந்த வெண்பாக்களால் ஆகிய நூல்) குறள் – இரண்டடி வெண்பா, திரு – சிறப்பு அடைமொழி
 • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகுபெயர்
 • பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று
 • உலகப்பொதுமறை, தமிழர் திருமறை, வாயுறை வாழ்த்து, முப்பால் என வேறுபெயர்களில் வழங்கப்படுகிறது.
 • மனித நாகரிகம் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் வகுத்துக்காட்டிய நூல்.
 • ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய பல உலகமொழிகளில் மொழிபெயர்க்கபப்பட்டுள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்