Tamil Nadu 7th Standard Tamil Book Term 1 ஒன்றல்ல இரண்டல்ல Solution | Lesson 1.2

பாடம் 1.2. ஒன்றல்ல இரண்டல்ல

ஒன்றல்ல இரண்டல்ல – பாடல்

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்
செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

பகைவென்ற திறம்பாடும் பரணிவகை – செழும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை – வான்

புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் – செம்
பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்
முகிலினும் புகழ்படைத்த உபகாரி – கவிச்

சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த
வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

– உடுமலை நாராயணகவி

நூல் வெளி

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.

இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.

தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.

நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

I. சொல்லும் பொருளும்

  • ஒப்புமை – இணை
  • முகில் – மேகம்
  • அற்புதம் – விந்தை
  • உபகாரி – வள்ளல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________

  1. கலம்பகம்
  2. பரிபாடல்
  3. பரணி
  4. அந்தாதி

விடை : பரணி

2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

  1. அகில்
  2. முகில்
  3. துகில்
  4. துயில்

விடை : முகில்

3. இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. இரண்டு + டல்ல
  2. இரண் + அல்ல
  3. இரண்டு + இல்ல
  4. இரண்டு + அல்ல

விடை : இரண்டு + அல்ல

4. தந்துதவும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. தந்து + உதவும்
  2. தா + உதவும்
  3. தந்து + தவும்
  4. தந்த + உதவும்

விடை : தந்து + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. ஒப்புமைஇல்லாத
  2. ஒப்பில்லாத
  3. ஒப்புமையில்லாத
  4. ஒப்புஇல

விடை : ஒப்புமையில்லாத

III. குறுவினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கவழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

2. ஒன்றல்ல இரண்டல்ல பாடலில் இடம் பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

  • முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
  • புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

IV. சிறுவினா

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?

  • பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
  • பரிபாடல் கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர்  கூறுகிறார்

கூடுதல் வினாக்கள்

I. பொருள் தருக

  1. முகில் – மேகம்
  2. உபகாரி – வள்ளல்
  3. அருள் – இரக்கம்
  4. சொல் – கூற
  5. கவி – கவிஞன்

II. பிரித்து எழுதுக

  1. ஒன்றல்ல = ஒன்று + அல்ல
  2. இரண்டல்ல = இரண்டு + அல்ல
  3. செங்கனி = செம்மை + கனி
  4. பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்

III. எதிர்ச்சொல் தருக

  1. பெருமை x சிறுமை
  2. இயற்கை x செயற்கை
  3. புகழ் x இகழ்
  4. கனி x காய்

IV. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் __________ மிக்கவர்களாக விளங்கினர்.

விடை : கொடைத்திறன்

2. முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் __________

விடை : வேள்பாரி

3. புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் __________

விடை : குமண வள்ளல்

4. ஒன்றல்ல இரண்டல்ல பாடலில் ஆசிரியர் __________

விடை : உடுமலை நாராயண கவி

5. பகைவரை வென்று பாடுவது __________ இலக்கியம் 

விடை : பரணி

6. உடுமலை நாராயண கவியின் இயற்பெயர் __________

விடை : நாராயணசாமி

7. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றவன் _______

விடை : வள்ளல் வேள்பாரி

8. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் _______

விடை : குமண வள்ளல்

9. இசைப்பாடல் நூல் ______

விடை : பரிபாடல்

10. வான்புகழ் கொண்ட நூல் ________

விடை : திருக்குறள்

11. அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்டவை _______ 

விடை : சங்க இலக்கியங்கள்

V. வினாக்கள்

1. தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் யாவை?

  • நில வளம்
  • நீர்வளம்
  • பொருள் வளம்
  • அருள் வளம்

2. தமிழ்மொழியிலுள்ள வளங்கள் யாவை?

  • இலக்கிய வளம்
  • இலக்கண வளம்

3. தமிழகத்தில் கொடைத்திறன் மிக்கவர்களாகத் திகழ்ந்தவர்கள் யாவர்?

  • மன்னர்கள்
  • வள்ளல்கள்

4. மழை மேகத்தை விட புகழ்பெற்றவன் யார்? அவன் செயல் யாது?

மழை மேகத்தை விட புகழ் பெற்றவன் – வள்ளல் வேள்பாரி

அவன் முல்லைக்கொடி படர்வதற்கு தன் விலை உயர்ந்த தேரை தந்தவர் ஆவார்

5. எங்கு தேன் மணம் கமழும்?

தமிழகத்தில் வீசும் காற்றில் மணம் கமழும்

6. உடுமலை நாராயண கவி – குறிப்பு வரைக

  • இயற்பெயர் – நாராயணசாமி
  • சிறப்பு பெயர் – பகுத்தறிவுக் கவிராயர்
  • பணி – தமிழ் திரைப்பட பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்

சில பயனுள்ள பக்கங்கள்