பாடம் 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
நயத்தகு நாகரிகம் > 1.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
நூல் வெளி
டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்; தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்; இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர். இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை இவரது ‘இதய ஒலி’ என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது. |
மதிப்பீடு
டி.கே.சி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
முன்னுரை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாக்கியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பாரதியார்
பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்
பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள். அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர். அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
சீவைகுண்டம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.
கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர்.
கருவைநல்லூர்
சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர். இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்து இருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.
குற்றாலம்
கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்ந்து அமைந்திருப்பதைப் பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் இங்கு வந்தார். நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார்.
பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.
முடிவுரை
தமிழ்மணம் கவழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்று போற்றுதலுக்குரிய நகர் திருநெல்வேலி என்பதை அறிய முடிகின்றது.
கூடுதல் வினாக்கள்
1. தேசிகவிநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் எது?
தேசிகவிநாயகனார் நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகரம் ஆகும்.
2. முக்கூடல் என்பது யாது?
மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல்.
3. திருஞான சம்பந்தர் குற்றாலத்தை எவ்வாறு பாடினார்?
நுண் துளி தூங்கும் குற்றாலம்
என திருஞான சம்பந்தர் குற்றாலத்தை பாடினார்.
4. டி.கே.சி எவ்வாறு சிறப்பிக்கப்பட்டவர்?
டி.கே.சி இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர்.
5. டி.கே.சி வீட்டில் எந்தப் பெயரில் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்?
டி.கே.சி வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.
6. டி.கே.சி எவ்வாறெல்லாம் புகழப்படுகிறார்?
கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர்
7. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை எந்நூலில் இருந்து தரப்பட்டுள்ளது?
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை ‘இதய ஒலி’ என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.
சில பயனுள்ள பக்கங்கள்